2023ம் ஆண்டுக்கான உள்ளூராட்சி வார மற்றும் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா இன்று (11.04.2024) நகரசபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு நகரசபை செயலாளர் திருமதி.தாரணி கஜரூபன் அவர்கள் தலைமை தாங்கினார். இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வடமராட்சி வடக்கு பிரதேச செயலாளர் திரு.சி.சத்தியசீலன் அவர்களும், வடமராட்சி வலயக் கல்வி அலுவலக பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு.மோ.தெய்வேந்திரா அவர்களும் கலந்து சிறப்பித்தனர். ஆத்தியடி முன்பள்ளிச் சிறார்களின் சிறப்பான மேலைத்தேய இசையுடன் (பான்ட் வாத்தியம்) விருந்தினர்கள் மற்றும் அதிதிகள் அழைத்து வரப்பட்டனர். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள்,சிறந்த நாடகக் கலைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். அத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த வரி இறுப்பாளர், சிறந்த வாழ்வாதாரப் பயனாளி, சிறந்த ஊழியர்கள் மற்றும் அதிகளவான ஆதன வரியினை அறவிட்டுத் தந்த நடுக்கட்டு உத்தியோகத்தர் ஆகியோர் பாரட்டுக்களையும் பரிசில்களையும் பெற்றனர். தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு தரம்-01 தொடக்கம் தரம்-12 வரையான பாடசாலை மாணவர்களுக்கு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் உலக மண் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கும் சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்பட்டன. 2023ம் ஆண்டுக்கான உள்ளூராட்சி வார மற்றும் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழாவில் உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு சனசமூகங்களுக்கிடையே நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற சனசமூக நிலையங்களுக்கு வெற்றிக் கேடயம், சான்றிதழ்கள் மற்றும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.